×

பாஜவை நம்பி மோசம்போன தமாகா நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூட்டணி கட்சிகள் புகார்: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக முடிவு?

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விஜயகுமார் போட்டியிட்டார். அக்கட்சி முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜ் போன்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜ எம்எல்ஏக்களில் ஒருவரான சரஸ்வதி ஆகியோர் இருக்கும் நம்பிக்கையுடன் ஈரோடு தொகுதியை ஜி.கே.வாசன் கேட்டு பெற்றார்.

அவரது எதிர்பார்ப்பிற்கு இணங்க வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தமாகா நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தேர்தல் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பது போல் தமாகாவுக்கு ஆதரவாக பாஜ சார்பில் யாரும் வாக்கு சேகரிக்க வரவில்லை. தமாகா நிர்வாகிகள் 5, 6 பேர் மட்டுமே தனியாக சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்தனர்.

ஈரோடு தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சொல்லி வைத்தது போல் பாஜவின் ஒத்துழைப்பு மண்ணளவும் கிடைக்கவில்லை என்று தமாகா நிர்வாகிகள் கண்ணீர் விடாத குறையாக புகார்களை கொட்டித் தீர்த்தனர். குறிப்பாக ஈரோடு கிழக்கு, மேற்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளரிடம் பணம் பறிக்கும் வேலையிலேயே பாஜ நாடாளுமன்ற பொறுப்பாளரும், மூத்த நிர்வாகியுமான பழனிசாமி மற்றும் மாவட்ட தலைவர் வேதானந்தம் ஆகியோர் முனைப்பு காட்டியதாக தமாகா நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

மேலும், பாஜ மாவட்ட தலைவர், தன்னை மீறி கட்சி நிர்வாகிகள் யாரையும் தமாகா அணுக கூடாது என்று மிரட்டல் விடுத்தார், தன் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து பகுதிகளிலும் பிரசாரத்துக்கு தேவையான நோட்டீஸ் மற்றும் பதாகைகளை தன் விசுவாசிகளான ஒன்றிய நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கும் படி கூறி, அனைத்தையும் பயன்படுத்தாமல் குப்பை தொட்டியில் வீசிவிட்டு யார் கண்ணிலும் படாமல் மறைத்து விட்டார் என்று தமாகாவினர் வேதனையுடன் கூறினர்.

மேலும், தனது கட்சி நிர்வாகிகளை, தன் நண்பரும் திருப்பூர் தொகுதி வேட்பாளருமான முருகானந்தத்துக்கு வேலை செய்ய உடன் அழைத்துச் சென்றுவிட்டார், அந்த மாவட்ட தலைவர் என புலம்பி வருகின்றனர். பாஜ மாவட்ட தலைவர் தான் இப்படி என்றால், எம்எல்ஏ சரஸ்வதியும் பெயரளவிற்கு மட்டும் ஓரிரு நாட்கள் வேட்பாளருடன் பயணம் செய்து விட்டு கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், மதுரை, நெல்லை என சென்று விட்டார். இங்கு ஏற்கனவே மாவட்ட தலைவர் வேதானந்தத்திற்கும், சரஸ்வதி எம்எல்ஏவுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளதால் அங்கு இருந்தால் மேலும் பிரச்னை அதிகமாகும் என்று வேறு தொகுதிகளுக்கு அழைப்பு இல்லாமலே சென்று விட்டதாக சொல்கின்றனர்.

பாஜவை நம்பி தானே, இந்த தொகுதியை வாங்கினோம். ஆளுக்கொரு கதையை கூறி சென்றுவிட்டால் எதற்கு கூட்டணி.. என தமாகா நிர்வாகி தலையில் அடித்துக் கொள்கிறார். இது குறித்து மாவட்ட தலைவர் வேதானந்தத்தின் ஆதரவாளர்கள் கூறும்போது, சரஸ்வதி, தன் மருமகனும் அதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளருமான ஆற்றல் அசோக்குமாருக்கு எதிராக வேலை செய்யாமல் தவிர்க்க வேறு தொகுதிக்கு சென்றதாக கூறினர்.

மறுபக்கம் வேதானந்தமோ, பூத் கமிட்டி அமைப்பதிலும் நிறைய தில்லுமுல்லு செய்து கட்சி தன் காலத்தில் வளர்ந்துள்ளது போன்று காட்டிகொள்ள மாநில தலைமைக்கு பொய்யான தகவல்களை தொடர்ந்து அளித்து வந்துள்ளார். எந்த பூத்திலும் பாஜவை சேர்ந்தவர்கள் ஏஜென்ட் ஆக இல்லை. மாறாக தினக்கூலிக்கு ஆள் பிடிப்பது போல் ரூ.500, 3 வேளை உணவு, சரக்கு என்று கூறி கடனுக்கு உட்கார வைத்துவிட்டு தன்னிடம் பூத் கமிட்டி மிகவும் உறுதியாக இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்து அதற்கும் ஒரு பெரும் தொகை பெற்று கொண்டார்.

நன்கு வேலை செய்து வந்த கட்சி நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், அமமுக, பாமக ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் ஓரம் கட்டியதுடன், பாஜவை நம்பி தேர்தலில் களம் காண வந்த தமாகாவை நம்ப வைத்து ஏமாற்றி அதிகார மையத்தில் உள்ள பாஜவினர் கல்லா கட்டிவிட்டனர் என்று புலம்பித் தவிக்கின்றனர் கூட்டணி கட்சியினர். இதற்கு அந்த தொகுதி பாஜ ஒன்றிய தலைவர்களும் மாவட்ட தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என்பது தான் மிகவும் வேதனை. குறிப்பாக மாவட்ட தலைவர் வேதானந்தத்திற்கு வலதுகரமாகவும், எல்லாமுமாக இருந்து வருபவர் கள்ள நோட்டு கணபதி என்றும் பணம் கையாடல் செய்ததில் கள்ள நோட்டு கணபதிக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் கூட்டணி கட்சியினர்.

பூத் கமிட்டி செலவினங்கள் பிரச்னை பூதாகரமாகி, மாவட்ட தலைவர் வேதானந்தத்திடம் தமாகாவினர் கேள்வி கேட்க, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, நீங்கள் எதுவாயினும் தேர்தல் பொறுப்பாளர் பழனிசாமிடம் கேளுங்கள் என்று கை காட்டி விட்டு முருகானந்தத்திற்கு வாக்கு சேகரிக்க திருப்பூர் சென்று விட்டார். இந்த பிரச்னையை எல்லாம் அறிந்த அமமுக நிர்வாகி ஒருவர், இது குறித்து பாஜக நிர்வாகியிடம் கேள்வி எழுப்பியதற்கு உங்களுக்கு மட்டும் பணம் தருகிறேன் வாருங்கள் என்று சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் முறைகேடுகளையும், கோல்மால்களையும் பாஜ மாநில தலைமைக்கு கொண்டு செல்ல கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளனர். எப்படியாவது சைக்கிளில் நாடாளுமன்றம் செல்ல நினைத்திருந்த தமாகா தலைவர், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பாஜவினர் மீது கோபத்தில் உள்ளதாகவும், டெபாசிட் கிடைக்காவிட்டால் பாஜ கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியிலேயே இருந்திருந்தால் நமக்கான மரியாதை கிடைத்திருக்கும் என தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமாகாவை நம்ப வைத்து ஏமாற்றி அதிகார மையத்தில் உள்ள பாஜவினர் கல்லா கட்டிவிட்டனர் என்று புலம்பித் தவிக்கின்றனர் கூட்டணி கட்சியினர்.

The post பாஜவை நம்பி மோசம்போன தமாகா நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூட்டணி கட்சிகள் புகார்: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக முடிவு? appeared first on Dinakaran.

Tags : Alliance ,Tamaka Parliamentary elections ,BJP ,AIADMK ,Chennai ,Vijayakumar ,Tamil State Congress ,National Democratic Alliance ,Erode ,MLA ,Vidyal Shekhar ,Yuvraj ,BJP MLAs ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்